ADDED : பிப் 22, 2024 02:51 AM
சென்னை:மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர், சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலர் மாயமலை கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது; இதுவரை வழங்கவில்லை.
அமைச்சரிடம் பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள கிராம உதவியாளர்களுக்கு, 9,000 ரூபாய் சிறப்பு பென்ஷன் வழங்குவதுபோல், எங்களுக்கான 2,000 ரூபாயை, 9,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் காலமுறை ஊதியம் தர வேண்டும் என, போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.