அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணைக்கான இடைக்கால தடை நீட்டிப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணைக்கான இடைக்கால தடை நீட்டிப்பு
ADDED : ஜூன் 24, 2026 02:57 PM

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
2001ம் ஆண்டு முதவ் 2006ம் ஆண்டு வரை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.7 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
2019ம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அனிதா ராதா கிருஷ்ணன் மீது சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடியில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் இந்த மனு ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அனிதா ராதா கிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர். அதுவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.
