‛‛அஞ்சு ரூவா அதிமுக'': சமூக வலைதளத்தில் டிரெண்டிங்
‛‛அஞ்சு ரூவா அதிமுக'': சமூக வலைதளத்தில் டிரெண்டிங்
ADDED : அக் 21, 2024 05:58 PM

சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தின்போது ஓபிஎஸ், இபிஎஸ் பெயர்களை எழுதி பிஸ்கட் பாக்கெட் மூலமாக ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோ வைரல் ஆனதையடுத்து, 5ரூவாய்க்குஅதிமுக என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன. குறிப்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்ற மோதல் போக்கு இருந்த நிலையில், இறுதியில் இபிஎஸ் வசம் கட்சி சென்றுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக.,வினர் எப்படி முடிவெடுத்தனர் என்ற தகவலை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவெடுத்து தீர்மானமாக நிறைவேற்றி, அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானாலும், அதனை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது தான் அவர் சொன்ன தகவல். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இதற்கு பொதுக்குழு, செயற்குழு வேண்டாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கூப்பிடுங்கள்; டேபிளில் இரண்டு பெட்டிகள் வைத்துவிடுங்கள்; அதில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரின் பெயர்களை எழுதிவிட்டு, இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை கொடுத்து, யாருக்கு ஓட்டுப்போட வேண்டுமோ அவர்களின் பெட்டியில் பிஸ்கட்டை கொண்டு ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் எனக் கூறினேன். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், #5ரூவாய்க்குஅதிமுக என்ற ஹேஸ்டேக்கை திமுக.,வினர் மற்றும் இணையவாசிகள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.