ADDED : ஜன 27, 2026 08:18 AM

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை, நான்கு பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விருதாளர்கள் விபரம்:
நீலகிரி மாவட்ட தீயணைப்பு வாகன ஓட்டுநர் சங்கர், தீயணைப்பாளர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ்குமார்: கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர், நீலகிரி மாவட்டம் குன்னுாருக்கு, கடந்த மே 25ம் தேதி சுற்றுலா வந்தனர்.
அவர்கள் வந்த கார், பெரியசோலை வழியாக தர்மகிரி நோக்கி நள்ளிரவில் சென்றபோது, பாண்டியாற்றின் துணை நதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு சாலையில் பாய்ந்து ஓடியது. காரில் இருந்த மூன்று பேரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
குன்னுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார் ஆகியோர், தீயணைப்பு வாகனத்தில் அங்கு சென்றனர். சுழலும் நீரில் குதித்து, நீந்தி சென்று காரிலிருந்த மூவரையும் மீட்டனர். அவர்களின் அசாதாரண துணிச்சலை பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டது.
பீட்டர் ஜான்சன், கன்னியாகுமரி மாவட்டம்: இவர், கடந்த ஜூன் 1ம் தேதி காலை 11:00 மணியளவில் குழித்துறையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் குளிப்பதற்காக நின்றிருந்தார். அப்போது மனோ, 17, அகிலேஷ், 12, ஆகியோர் தடுப்பணையை கடந்து செல்லும்போது, தவறுதலாக தாமிரபரணி ஆற்றில் விழுந்தனர்.
இதை கவனித்த பீட்டர் ஜான்சன், ஆற்றில் குதித்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றினார். ஆனால், ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கிய அவர், பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வீர தீர செயலை பாராட்டும் வகையில், அவரது மனைவியிடம் பதக்கம் வழங்கப்பட்டது.

