ஒரே மணி நேரத்தில் அதிர்ந்தது அண்ணா நகர்! கொட்டித் தீர்த்தது 11 செ.மீ., மழை
ஒரே மணி நேரத்தில் அதிர்ந்தது அண்ணா நகர்! கொட்டித் தீர்த்தது 11 செ.மீ., மழை
ADDED : அக் 31, 2024 01:31 AM

சென்னை : வானிலை மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், சென்னையில் நேற்று ஒரு மணி நேரத்தில், 11 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை, அக்., 15ல் துவங்கியது. அக்., 15, 16ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது.
மேக மூட்டம்
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் 30 செ.மீ., மழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில், 17 செ.மீ., வரை மழை பெய்தது.
கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது லேசான மழை இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துஇருந்தது.
அதை பொய்யாக்கும் வகையில், நேற்று காலை முதல், சென்னையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியம் 12:00 மணிக்கு மேல், பல்வேறு இடங்களில் திடீரென கன மழை கொட்டியது. அதிகபட்சமாக, அண்ணா நகர் மேற்கு பகுதியில், ஒரு மணி நேரத்தில் 11 செ.மீ., மழை பெய்தது.
கனமழை
இதேபோல், கொளத்துார், அம்பத்துார், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
பகுதி வாரியாக மழை விபரம்:
அண்ணா நகர் மேற்கு, 11 செ.மீட்டர்; அண்ணா நகர், கொளத்துார், 7; தேனாம்பேட்டை, திரு.வி.க., நகர், மணலி, 6; கோடம்பாக்கம், அண்ணா நகர், 5; அம்பத்துார், 4 செ.மீ., மழை பெய்து உள்ளது.
திடீரென கொட்டிய கனமழையால், தீபாவளி கொண்டாட்டத்துக்காக, 'ஷாப்பிங்' சென்றவர்கள், வெளியூர் செல்ல புறப்பட்டவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஒரு மணி நேரத்தில் வடிந்த வெள்ளம்
சென்னையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. அதிகப்படியாக அண்ணா நகரில் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கனமழையால், அண்ணா நகர் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்தில் படிப்படியாக வெள்ளம் வடிந்தது.
![]() |
அதேபோல், அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் ஒன்பதாவது பிரதான சாலை, ஐந்தாவது பிரதான சாலை உள்ளிட்ட சாலையில் மழைநீர் தேங்கியது. திருமங்கலம் பள்ளி சாலை, 100 அடி சாலையில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. வழக்கமாக தேங்கும் சூளைமேடு பகுதியில், பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. கண்ணகி தெருவில் மட்டும் தண்ணீர் தேங்கியது.
அதேபோல், வழக்கமாக வில்லிவாக்கம் சிட்கோ நகர் நான்காவது பிரதான சாலையில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பாரதிநகர் 2 மற்றும் நான்காவது தெருக்களில் தண்ணீர் தேங்கியது.