விசாரணைக்கு வராமல் டிமிக்கி; மோசடி பேராசிரியர்களின் வில்லத்தனம்!
விசாரணைக்கு வராமல் டிமிக்கி; மோசடி பேராசிரியர்களின் வில்லத்தனம்!
ADDED : அக் 26, 2024 11:35 AM

சென்னை: ஒரே நேரத்தில் பல கல்லுாரிகளில் பணியாற்றுவதாக நடந்த மோசடியில், குற்றச்சாட்டுக்கு ஆளான 676 பேராசிரியர்கள் முக்கால்வாசி பேர் விசாரணைக்கு வராமல் ஏமாற்றியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பேராசிரியர் நியமன மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 676 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியை அறப்போர் இயக்கம் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை உறுதி அளித்தது.
முதல் கட்டமாக, மோசடியில் சிக்கிய கல்லூரிகளுக்கு விளக்க கடிதம் கேட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மோசடியில் சிக்கிய 676 பேராசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், இந்த பட்டியலில் உள்ளவர்களில் வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து பல பேராசிரியர்களும் சென்னை வருவதில் சிரமம் ஏற்பட்டு விசாரணை தடைபடும் என்று கருதி, மண்டல வாரியாக 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்கள் நான்கு இடங்களுக்கு சென்று விசாரணையை நடத்தி முடித்து இருக்கின்றன. எஞ்சிய 2 இடங்களான சென்னை மற்றும் கோவையில் இம்மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்குழு முன்பு ஆஜரான 170 பேராசிரியர்களில், பெரும்பாலானவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் தான் விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர்.