அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை!
UPDATED : டிச 30, 2024 06:21 AM
ADDED : டிச 29, 2024 11:26 AM

சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. இன்று (டிச.,30) விசாரணையை துவக்க உள்ளது.
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில், எப்.ஐ.ஆர்., வெளியானதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், கட்டணம் எதுவும் வசூலிக்காமல், மாணவி தன் படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ' பாலியல் வன்முறைக்கு உள்ளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், '' என தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரிக்க இருக்கின்றனர். டில்லியில் இருந்து தேசிய ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் இன்று தமிழகம் வர இருக்கின்றனர்.