அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி; வளாகத்தில் சைக்கிள் மட்டும் அனுமதி!
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி; வளாகத்தில் சைக்கிள் மட்டும் அனுமதி!
ADDED : ஜன 05, 2025 01:33 PM

சென்னை: அண்ணா பல்கலை., வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பிரபலமான சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் போராட்டம் ஒரு புறம், மாணவிகளின் மீதான பாதுகாப்பு பற்றிய கேள்விகள் ஒருபுறம் என பல்கலைக்கழகம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. இந்நிலையில், இன்று (ஜன.,05) பல்கலைக்கழக வளாகத்திற்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
* அண்ணா பல்கலை., வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலை பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
* வெளிநபர்கள் நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
* மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.
* பணி முடிந்ததும் கட்டுமான தொழிலாளர்கள் பல்கலையை விட்டு வெளியேற வேண்டும்.
* வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும்.
* மாணவர்கள் எப்போதும் தங்கள் அடையாள அட்டையை அணிய வேண்டும்.
* சி.சி.டி.வி., கேமிரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
* பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.