"ஆயிரம் கோடியில் லாபம் பார்க்கும் ஹிண்டன்பர்க் " - அண்ணாமலை திடுக்
"ஆயிரம் கோடியில் லாபம் பார்க்கும் ஹிண்டன்பர்க் " - அண்ணாமலை திடுக்
UPDATED : ஆக 11, 2024 02:25 PM
ADDED : ஆக 11, 2024 10:46 AM

திருப்பூர் : ‛‛ பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தேசிய கொடி என்றாலே திமுகவுக்கு பிடிக்காது
அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது, கடந்த 3 ஆண்டுகளில் சமூக இயக்கமாக மாறி உள்ளது. பிரதமர் கூறியது குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த டூவீலரில் பேரணிக்கு ஏற்பாடு செய்தோம். நாடு முழுவதும் இந்த பேரணி நடக்கிறது. ஆனால், திருப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வுக்கு தேசியக்கொடி என்றாலே பிரச்னைதான். பேரணியில் பா.ஜ., கொடி இருக்காது. கட்சி பேரணி கிடையாது. தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேசியக்கொடி, தங்களுக்கு பிடிக்காது என்பதை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள். வாகன பேரணி அனுமதி மறுப்பு மூலம் அவர்களின் கோபத்தை காட்டுகின்றனர். இதனை அரசு செய்ய வேண்டும், முதல்வர் சொல்ல வேண்டும். முதல்வர், அவரது கட்சி இளைஞரணியை அழைத்து தேசியக்கொடியுடன் பேரணி நடத்த வேண்டும் எனக்கூற வேண்டும். இந்த நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தான் முதல்வராக இருக்கிறார். தனியாக, ஜப்பான் சட்டத்தின்படி தமிழக முதல்வராக இருக்கிறாரா? இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படிதான் தலைவராக இருக்கிறார்.
முதல்வர் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்களாக நாங்கள் செய்கிறோம். இதற்கு அவர்கள் வெறுப்பு காட்டுகின்றனர். பா.ஜ., வாகன பேரணிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கலாம்.தேசியக்கொடியை கொண்டு போகிறதுனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வரப்போகிறது?
ஹிண்டன்பர்க்
ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதி ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம்.
செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக அந்த நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

