ADDED : ஆக 21, 2025 05:56 AM
சென்னை: ''மக்களின் குரலைத்தான், தேசிய ஜனநாயக கூட்டணி ஒலிக்கிறது. தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து இறக்கி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார்; அவர் உறுதியாக வெற்றி பெறுவார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் விருப்பம்.
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை நடவடிக்கை வாயிலாக டில்லியில் ஒரு அமைச்சர், ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தார்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் ஒரு அமைச்சர் சிறையில் பல நாட்கள் இருந்தார். எட்டு, ஒன்பது மாதங்களுக்கு பின் தான், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனவே, மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது. 'தவறு செய்தவர்கள் கட்டாயம் சிறைக்கு செல்வர்' என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, அக்கட்சி இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதேபோல் விஜய் செயல்பாடுகள் அமைய வேண்டும். விஜய் மாநாட்டுக்கு வாழ்த்துகள்.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மக்களின் குரலை தேசிய ஜனநாயக கூட்டணி ஒலிக்கிறது.
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து இறக்கிய பின், தேசிய ஜனநாயக கூட்டணி, அந்த இடத்தில் அமரும் என, மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். எங்களின் கொள்கையை மக்கள் அதிகம் நம்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.