கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற அண்ணாமலை கைது!
கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற அண்ணாமலை கைது!
UPDATED : டிச 20, 2024 08:41 PM
ADDED : டிச 20, 2024 07:37 PM

கோவை: கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
எதிர்ப்பு
கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் உம்மா தலைவர் பாட்ஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கியதற்கு தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்படி இருந்தும், கோவை மாநகரில் போக்குவரத்தை நிறுத்தி, இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை (டிச.,20) கருப்பு தினமாக அறிவித்து பேரணி நடத்தப்போவதாக பா.ஜ., அறிவித்தது.
போலீசார் குற்றச்சாட்டு
மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் போது முதல்வர் எப்படி பேசுகிறார் என்பதற்கும், தமிழக சட்டம் ஒழுங்குக்கும் இது ஒரு உதாரணம். சத்தியமங்கலம் வனப்பகுதியில் உமர் பரூக் என்பவன் தலைமையில் 8 பேர் ஒன்று கூடி தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் முபின் என்பவன் காரில் சிலிண்டரை கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டான். இதனை வைத்து பா.ஜ., அரசியல் செய்வதாக போலீசார் குற்றம் சாட்டினர்.
கோவையில் என்.ஐ.ஏ.,
ஆனால், பயங்கரவாதிகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தையும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இத்தனை நாட்கள் போலீஸ் என்றால் மரியாதை இருந்தது. அது போய் விட்டது. இந்த வழக்கில் 18 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவையில் என்.ஐ.ஏ., கொண்டு வருவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார்.
ஓட்டுப்பிச்சை
கடந்த 1998 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு நடத்திய பாட்ஷாவை தகப்பா என சீமான் கூறுகிறார். பாட்ஷா வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த 250 பேருக்கு அப்பா இல்லையா. ஓட்டுப்பிச்சை எப்படி எடுப்பது என்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு உங்கள் வழியில் அரசியல் செய்யத் தெரியும். ஆனால், அது வேண்டாம். பா.ஜ., தானாக வளரட்டும்.
திருமாவளவன், தியாகி என சொல்கிறார். வீரவணக்கம் என்கிறார். இதை விட மோசமாக வேறு யாராலும் ஓட்டுப்பிச்சை எடுக்க முடியாது. ஓட்டுப்பிச்சை எடுக்க காரில் ஏறி கோவை வருகின்றனர்.
கோவை மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோவையின் வளர்ச்சி ஓட்டுப்பிச்சையால் தடைபட்டு உள்ளது. நகரில் சாலை என எதுவும் சரியில்லை. ஆனால், ஓட்டுப்பிச்சையால் வெற்றி பெறலாம் என இருக்கின்றனர். பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் கோவை நகரம் இருக்க வேண்டும்.
2023ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பாராட்டி உள்ளனர். நாம் அமைதியை விரும்புபவர்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். இது மாற்றத்திற்கான நேரம்.
அஞ்சலி
கடந்த 2003ல் பிரதமர் மோடி கோவை வந்தால் கொலை செய்வேன் என நீதிமன்ற வளாகத்தில் இருந்து பத்திரிகையாளர்களை நோக்கி கத்தி பாட்ஷா சொன்னார். ஆனால், காஞ்சிபுரம், கோவை வந்த மோடி, இங்க ரோடு ஷோ நடத்திவிட்டு சென்றார்.
வராது
உதயநிதி எத்தனை முறை வேண்டுமானாலும் நான் ஒரு கிறிஸ்தவன், நான் ஒரு முஸ்லிம் என சொல்லிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு முறை நான் ஒரு ஹிந்து என சொல்லுங்கள். அதற்கு வாய் வராது. சுத்தமாக வராது. அங்கு பெருமைமிகு வரும். இங்கு வராது. கிறிஸ்தவர், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஓட்டுப்பிச்சை எடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
கோவையில் ரோடு ஷோ முடித்துவிட்டு, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதில் முஸ்லிம்களுக்கும் தான் அஞ்சலி செலுத்தினார். எங்களை பொறுத்தவரை இந்தியர்கள், தமிழர்கள் என்பது தான் அடையாளம். வேறு கிடையாது. மறதி என்பது தமிழர்களின் மிகப்பெரிய வியாதி. இது இருக்கும் வரை ஓட்டுப்பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
தடுத்து நிறுத்தினோம்
கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 9 பேரை விடுதலை செய்துவிட்டனர். ஈரோடு இடைத்தேர்தலின் போது பாட்ஷா உள்ளிட்ட சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வோம் என அமைச்சர் ஒருவர் கூறினார். பா.ஜ., தான் கவர்னரிடம் மனு அளித்து பிரச்னை செய்து அதனை தடுத்து நிறுத்தியது.
போலீசார் நேர்மையாக இருக்க வேண்டும். பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்திற்கு ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தீர்கள். இது நியாயமா? தவறான உத்தரவு யார் பிறப்பித்தாலும் ஏற்காதீர்கள்.
காக்கிச்சட்டை அணிந்த யாரும் தவறான உத்தரவை ஏற்கக்கூடாது என்ற தைரியம் வர வேண்டும். போலீசார் உங்கள் கடமையை செய்ய வேண்டும். பா.ஜ., தொண்டர்களுக்கு எழுச்சி வந்துள்ளது. நாம் பேசிக் கொண்டே இருப்பதால் பயனில்லை. ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.