13 ஆண்டுகளாக எஸ்.ஐ.,க்கள் தவிப்பு: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
13 ஆண்டுகளாக எஸ்.ஐ.,க்கள் தவிப்பு: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
ADDED : பிப் 04, 2024 08:36 AM

சென்னை: 'நிதி பற்றாக்குறை என்ற, சற்றும் ஏற்க முடியாத காரணத்தை கூறி, 1,905 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காவல் துறையில், 2011ல் நேரடியாக பணியில் சேர்ந்த, 1,905 எஸ்.ஐ.,க்கள், 13 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி உள்ள செய்தி வருந்தத்தக்கது.
பிற அரசு துறைகளில், ஐந்து முதல் ஏழு ஆண்டுகளிலேயே பதவி உயர்வு பெறும்போது, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல் துறை மட்டும், எப்போதும் வஞ்சிக்கப்பட்டு வருவதை ஏற்க முடியாது.
கடந்த ஆண்டே, எஸ்.ஐ.,க்களின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, காவல் துறை தலைமை இயக்குனரிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அரசின் நிதி பற்றாக்குறையால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதோடு, பணிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இனியும் தாமதிக்காமல், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறை என்ற, சற்றும் ஏற்க முடியாத காரணத்தை கூறும் தி.மு.க., அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்கு செலவிடும் நிதியை, ஆக்கப்பூர்வமான அரசு நிர்வாகத்திற்கு செலவிடுவது, அனைவருக்கும் பலன் அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.