அமைச்சர் நேரு துறையில் ரூ. 1,905 கோடி ஊழல்: அண்ணாமலை திடுக்கிடும் புகார்
அமைச்சர் நேரு துறையில் ரூ. 1,905 கோடி ஊழல்: அண்ணாமலை திடுக்கிடும் புகார்
UPDATED : டிச 12, 2025 09:52 PM
ADDED : டிச 12, 2025 06:30 PM

கோவை: அமைச்சர் கே.என். நேருவின் துறையில் ரூ. 1,905 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி;
அக்.2025ல் அமைச்சர் நேருவின் துறையில் பணி நியமனத்துக்காக, ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் 150 பேரை குறிப்பிட்டு வாட்ஸ் அப் உரையாடல்கள், பணம் எப்படி கைமாறி உள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
வாட்ஸ் அப் உரையாடல்
அது சம்பந்தமாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. டிச. 3ம் தேதி மீண்டும் ஒருமுறை பொறுப்பு டிஜிபிக்கு அமலாக்கத்துறை 258 பக்கம் கடிதம் அனுப்பியது. நகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வழங்கல் துறையில், 1020 கோடி ரூபாய் ஊழல் என்பதற்கான ஆவணத்தை இணைத்திருந்தனர்.
வாட்ஸ் அப் உரையாடல், ஹவாலா பணத்தை துபாய்க்கு அனுப்பியது போன்ற விவரங்களையும் தந்துள்ளனர். நிறைய வாட்ஸ் அப் உரையாடல்களில் கட்சி நிதி என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரத்தையும் அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருக்கிறது.
'இதில் உண்மை இல்லை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று நேரு எளிதாக கடந்து சென்றுள்ளார். மறுபடியும் சொல்கிறோம், 888 கோடி ரூபாய் இன்ஜினியர் பதவி நியமனத்திலும், நேரு துறையில் ஒப்பந்ததாரர் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொடுத்துள்ளனர்.
இன்று நேரு துறையில் நடந்துள்ள அடுத்துக்கட்ட குளறுபடி. ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையில். அதில் ஊராட்சி செயலாளருக்கான பதவி நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்கும். நியாயமாக இன்று அல்லது நாளைக்கு நேர்காணல் நடந்திருக்க வேண்டும். ஆனால் நேற்று மாலை இண்டர்வியூ கேன்சல் என்று வருகிறது.
தெரியவில்லை
யார் யார் எல்லாம் இண்டர்வியூவுக்கு தகுதியானவர்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளனர். என்ன அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டனர் என்று யாருக்குமே தெரியவில்லை. தேர்வானவர்களை விட, தேர்வாகாமல் உள்ள நபர்கள் தகுதியான நபர்களாக உள்ளனர்.
பொறுப்பு டிஜிபி
எஸ்ஐஆரை பொறுத்தவரை வாக்காளர் பட்டியலில் 80 லட்சம் பேரை நீக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இன்று தேர்தல் கமிஷன் கொடுத்த ஆவணத்தின் படி 77 லட்சம் பேரை நீக்கி உள்ளனர். வரைவு பட்டியலுக்கு முன்பாக தினமும் கொடுக்கும் செய்தி அறிக்கை அடிப்படையில் இதை தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த பட்டியலை கொண்டு தான் வாக்காளர்களை நாம் சந்தித்துள்ளோம்.
அவதூறு
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரி 120 எம்பிக்கள் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இந்திய அரசியல் சரித்திரத்தில் முதல் முதலாக ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர். அந்த நோட்டீசில் திமுகவினர் பல அவதூறுகளை பரப்பி உள்ளனர். இவ்வளவு பொய்களை பேசியதை பார்லி.யில் உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதியரசர்கள் இன்றைக்கு இங்கே நேர்மையான முறையில் பணியாற்றுவதற்கு இடம் இல்லை. திமுக ஆட்சியாளர்கள் எல்லாவிதமான பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.
பேட்டி
அதன் பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது;
அமைச்சர் கே.என். நேருவுக்கு 3 கேள்விகள், அமலாக்கத்துறை கேட்டதை நான் கேட்கிறேன். அடிப்படை எப்ஐஆர் கூட போடவில்லை. எல்லாவற்றிலும் வெளிப்படையான ஊழல். 2026ல் மக்களின் மனநிலை மாறும். இவர்கள்(திமுக) ஆட்சி போய்விடும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

