ADDED : செப் 04, 2026 07:14 AM

சென்னை: 'பட்ஜெட்டில் இல்லாத புதிய திட்டங்களை, முதல்வர் அறிவிப்பது ஏன்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: பட்ஜெட்டில் இல்லாத புதிய திட்டங்களை, சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், சட்டசபையில் ஒவ்வொரு நாளும் முதல்வர் அறிவிப்பது ஏன்; அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் எனில், பட்ஜெட் என்ற ஒன்று எதற்கு; அதன் மீதான விவாதங்கள் தான் எதற்கு?
முதல்வர் வெளியிடும் அனைத்துமே முக்கியத் திட்டங்கள் எனில், சபையில் விவாதிக்க வேண்டாமா?
த.வெ.க., அரசு, 110 விதியின் கீழ் வெளியிட்ட திட்டங்களுக்கான மதிப்பு, 73,900 கோடி ரூபாய். அதற்கு மேல், இலவச காஸ் சிலிண்டர், இலவச பஸ், உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை, 110 விதியின் கீழ் அறிவிப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
