உழவர் தொடர்பு திட்டம் 2.0 அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறியல் தோட்டக்கலை துறை அனைத்து அலுவலர்கள் அறிவிப்பு
உழவர் தொடர்பு திட்டம் 2.0 அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறியல் தோட்டக்கலை துறை அனைத்து அலுவலர்கள் அறிவிப்பு
ADDED : டிச 21, 2025 03:30 AM
கம்பம்: உழவர் தொடர்பு திட்டம் 2.0 திட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (டிச. 22) சென்னையில் தோட்டக்கலைத் துறையினர் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக வேளாண் துறையில் ஒரு வட்டாரத்தில் ஒரு கிராமத்திற்கு உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவிதோட்டக் கலை அலுவலர்கள் பணியில் இருந்தனர்.
அவரவர் துறை பணிகளை மேற்கொண்டனர். வேளாண் துறையில் மாற்றங்களை கொண்டு வர அமைச்சகம் முடிவு செய்து உழவர் தொடர்பு திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்பட்டது.
இத் திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு உதவி வேளாண் அலுவலர் அல்லது ஒரு உதவிதோட்டக் கலை அலுவலர் மட்டுமே பணியில் இருப்பார்.
ஒ ரு கி ராமத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் இருந்தால் அவர் தோட்டக்கலை, வேளாண் துறை, மார்க்கெட்டிங், வேளாண் பொறியியல் துறை என 4 துறைகளின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான்கு துறைகளின் உதவி இயக்குநர்களுக்கும் அறிக்கை வழங்க வேண்டும். அதேபோன்று உதவி வேளாண் அலுவலர் இருந்தாலும் நான்கு துறைகளின் பணிகளையும் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதில் உதவி தோட்டக் கலை அலுவலரோ அல்லது உதவி வேளாண் அலுவலருக்கோ தங்கள் துறையை தவிர்த்து , பிற துறைகளில் நிபுணத்துவம் இருக்காது. ஒருவர் நான்கு உதவி இயக்குநர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், பணிச்சுமை அதிகமாகும் என தோட்டக்கலைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே உழவர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக் கலை அனைத்து அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் சமீபத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இந்த உத்தரவு ரத்து செய்யும் வரை பல்வேறு கட்ட போராட்டம் நடத்த உள்ளதாக தோட்டக்கலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஆனால் இந்த உத்தரவை வேளாண் துறை வரவேற்றுள்ளது. வேளாண் துறையினர் கூறுகையில்,'இந்த திட்டத்தை ஆதரிக்கிறோம். தோட்டக்கலைத்துறையினருக்கு பணி குறைவு.
வேளாண் துறையினருக்கு திட்டங்கள் அதிகம், அதனால் பணிகள் அதிகம். அனைவருக்கும் ஒரே மாதிரியான வேலைப் பளு இருக்க வேண்டும் என்று தான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது,'என்கின்றனர்.
இந் நிலையில் டிச.5ல் தமிழக அரசின் 2.0 திட்டத்திற்கான அரசாணை வெளியானது. டிச.31க்குள் அரசாணைப்படி பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் டிச. 22 க்கு ஈட்டிய விடுப்பு கோரி வழங்கய கடிதத்தை ஏற்றுக்கொள்ள, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நாளை ( டிச. 22 ) மறியல் போராட்டம் செய்யப் போவதாக தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

