அரசு விரைவு பஸ் பயணியருக்கு சிறப்பு பரிசு குலுக்கல் அறிவிப்பு
அரசு விரைவு பஸ் பயணியருக்கு சிறப்பு பரிசு குலுக்கல் அறிவிப்பு
ADDED : நவ 13, 2024 04:46 AM

சென்னை: பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து, பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் மாதந்தோறும் மூன்று பேருக்கு தலா, 10,000 ரூபாய், 10 பேருக்கு தலா, 2,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான குலுக்கலில் வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்களில் பயணிப்போர் இடம்பெற முடியாது.
தற்போது, அனைத்து பயணியரும் பயன்பெறும் வகையில், குலுக்கல் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, விடுமுறை நாட்கள் உட்பட முன்பதிவு செய்யும் அனைத்து பயணியரின் டிக்கெட்டுகளும் குலுக்கலில் இடம்பெறும். அத்துடன், மேலும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில், முன்பதிவு செய்யும் பயணியரில் மூவருக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது, வரும் 21ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி, 20ம் தேதி வரை பயணிப்போருக்கு மட்டுமே பொருந்தும்.
அவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக இருசக்கரவாகனம், இரண்டாவது பரிசாக எல்.இ.டி., ஸ்மார்ட் 'டிவி', மூன்றாவது பரிசாக 'பிரிஜ்' ஆகியன வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

