பொதிகை ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!
பொதிகை ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!
UPDATED : நவ 01, 2024 11:57 AM
ADDED : நவ 01, 2024 11:44 AM

தென்காசி: தண்டவாளத்தில் 10 கிலோ எடையுள்ள கல்லை வைத்து பொதிகை ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையான நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி, பொதிகை விரைவு ரயில், சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூரின் போகநல்லூர் பகுதியில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டு உஷாரான ரயிலின் லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தி, தண்டவாளத்தில் இருந்த பெரிய கல்லை அப்புறப்படுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த செப்., 26ம் தேதி இதே கடையநல்லுரில் பொதிகை விரைவு ரயில் சென்ற தண்டவாளத்தில் கல்லை வைத்த சம்பவத்தில் இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையிலும் தண்டவாளத்தில் போல்ட் மற்றும் நட் கழற்றி விடப்பட்டிருந்தது. இதனால் இரு ரயில்கள் மோதிக்கொண்டன. இதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கும் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ., படையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

