UPDATED : நவ 25, 2026 12:00 AM
ADDED : நவ 24, 2026 09:04 PM

பாரதி முருகன், மணலுார்பேட்டை:
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து செல்லும் காலுடன், 12 கி.மீ., துாரம் நடந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் செயல் எப்படிப்பட்டது?
விஜய் ஒரு எதார்த்தவாதி என்று சமூக ஊடகங்கள் பாராட்டி தள்ளுகின்றன; பொதுமக்கள் மத்தியில் அவரது, ‘இமேஜ்’ மேலும் உயர்ந்துள்ளது!
கே.நாசர், காரைக்குடி:
‘ஸ்டாலினுக்கு அருகில் அமர்ந்தபடி பழனிசாமி பேசுவதே அ.தி.மு.க.,விற்கு எதிரானது’ என்று அக்கட்சியினர் கூறுவது எதை காட்டுகிறது?
அது ஒரு திருமண நிகழ்ச்சி தானே... அதில் ஒருவருக்கொருவர் சந்திப்பதில் என்ன தவறு? அவ்வாறு பேசுபவர்களுக்கு அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது!
என்.கண்ணையா, மும்பை:
‘துரந்தர்’ உளவாளி போல், த.வெ.க., அமைச்சர் கீர்த்தனா செயல்படுவதாக, அ.தி.மு.க., பழனிசாமி கூறி இருக்கிறாரே?
அ.தி.மு.க., பழனிசாமிக்கு ஹிந்தி சினிமாவெல்லாம் பார்க்கும் அளவுக்கு, ஹிந்தி புலமையும், அவகாசமும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
வி.அனு, புதுச்சேரி:
தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும் என்கிறாரே, அதன் தலைவர் அன்புமணி?
எந்த பிரச்னை... அவரது கட்சியின் பிரச்னைகளா என, தெளிவுபடுத்தி இருக்கலாமே!
பி.ரகுநாதன், பெங்களூரு:
சென்னையில் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், வெப்பம் அதிகமாக நிலவும் தெருக்களை அடையாளம் கண்டு, அவற்றை குளிர்ச்சியான நிலைக்கு மாற்றும் வகையில், ‘பசுமை தெருக்கள் குளிர்ச்சியான நகரம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறித்து?
முதலில் தரமான சாலைகள், ஆக்கிரமிப்புகளற்ற நடைபாதைகள், கால்நடைகள் அற்ற, நாய்கள் இல்லாத, கழிவுநீர் – மழைநீர் தேங்காத சாலைகள், நல்ல வெளிச்சத்துடன் பராமரிக்கப்படட்டும்; பின், அடுத்த திட்டத்தை செயல்படுத்தட்டும்!
பெ.ராஜபாண்டி, மதுரை:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால்?
கமலஹாசன் படப்பாடல் போல், ‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ என்று டிரம்பே, அவரை பற்றி குழம்பி போயிருக்கிறார். அதில் நாம் வேறு எப்படி புரிந்து கொள்வது? ‘உஸ்... அப்பா...’ என்று பெருமூச்சு தான் வருகிறது.
எஸ்.புஷ்பலதா, திருப்பூர்:
‘ஒவ்வொரு வீட்டிலும் புத்தகம் அவசியம்’ என, முன்னாள் தலைமைச்செயலர் இறையன்புவின் கருத்து குறித்து?
இறையன்பு ஒரு சிறந்த அதிகாரி மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், பேச்சாளரும் கூட. நம் நிகழ்வுகள் பலவற்றிலும் பங்கேற்று மாணவர்களுக்கு நல்வழிகாட்டுபவர். ஆனால், இன்று புத்தகம் என்றாலே, ‘கிலி’ பிடித்துக் கொள்கிறதே!
