ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
UPDATED : ஜூன் 20, 2025 08:21 AM
ADDED : ஜூன் 20, 2025 06:16 AM

மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்தது தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார், பால்வளத்துறை கூடுதல் கமிஷனராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர், 1989ல் கூட்டுறவு சங்க மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பதவி உயர்வுகளுக்கு பின், 2019ல் பால்வளத்துறை கூடுதல் கமிஷனரானார்.
ரூ.1.75 கோடி இழப்பு
துவக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் செய்தது தொடர்பாக தணிக்கை நடந்தது. அதில், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிறிஸ்துதாஸ், 1.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, அப்போதைய பால்வளத்துறை இயக்குனர் காமராஜ், அப்போதைய கமிஷனர் வள்ளலார் மற்றும் கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. உடன், கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, ஓய்வு பெற அனுமதித்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் கிறிஸ்துதாஸ் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு அளித்த வாதம்: லஞ்ச ஒழிப்புத்துறை மனுதாரருக்கு எதிராக மட்டுமின்றி, அப்போதைய இயக்குனர் காமராஜ், கமிஷனர் வள்ளலார் மீதும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது.
காமராஜ், வள்ளலார் மீதான நடவடிக்கையை, 2023ல் பொதுத்துறை, 'சிறப்பு- ஏ'யின் கடிதம் மூலம் அரசு கைவிட்டது. மனுதாரர் இரண்டாம் நிலை அதிகாரி. கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகளை வழங்குவதில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் இயக்குனர் மற்றும் கமிஷனரின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினார்.
தள்ளுபடி
மனுதாரர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மனுதாரர் மீது எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. அவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிடப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இவ்வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோருக்கு எதிராக பொதுத் துறையில் ஒரு தனி நடவடிக்கை துவங்கப்பட்டது.
அது, அப்போதைய தலைமை செயலரால் முடித்து வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த காரணங்களை இந்நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் எட்டு ஆண்டுகள் சட்ட அதிகாரியாக பணிபுரிந்தேன். ஆறு ஆண்டுகளாக நீதிபதியாக உள்ளேன். பல வழக்குகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதை கண்டிருக்கிறேன். அதே நேரத்தில், மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்படுகிறது. ஆனால், துறைகளுக்கு தலைமை வகிக்கும் தவறு செய்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
துறை தலைவரின் துணையின்றி எந்த முறைகேடும் நடக்க முடியாது. நிறுவன தலைமை பொறுப்பில் சரியான நபர் இருந்தால், அவர்களின் துறைகளில் எந்த ஊழலும் இருக்காது. தவறு செய்த ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே துவங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.
நடவடிக்கை
குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்திற்கு ஆதாரங்கள் இருப்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்விவகாரத்தில் முறைகேடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத அரசின் கொள்கை நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.