அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ADDED : பிப் 28, 2024 09:30 AM

கடலூர்: பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது வீட்டில் இன்று (பிப்.,28) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் நகராட்சித் தலைவராக பதவி வகித்தபோது அவர் மீது சுமத்தப்பட்ட புகார் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
பன்னீர் செல்வம் கடந்த 2011-16 அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். அப்போது நகராட்சி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி கமிஷ்னர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பாகவே சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட 4 இடங்கள், சென்னையில் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி கமிஷனர் பெருமாளின் வீடு என மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது.

