வேன்களுக்கு விதிமீறி உறுதி தன்மை சான்று வழங்கி அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு: ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
வேன்களுக்கு விதிமீறி உறுதி தன்மை சான்று வழங்கி அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு: ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
ADDED : டிச 13, 2025 04:32 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 3 வாகனங்களுக்கு விதிமீறி உறுதிச் சான்றளித்து அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக வாகன ஆய்வாளர் கே.விஜயகுமார் 56, மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் 2023 ல் ஆய்வாளராக பணிபுரிந்தார். அக்கால கட்டத்தில் 3 பயணிகள் வேன் உரிமையாளர்கள் (வண்டி எண்: டி.என்., 67 பி.ஜெ.,1729, டி.என்., 18 ஏ.கே., 4768, டி.என்., 54 எஸ் 9055) உறுதி தன்மை சான்று கோரி விண்ணப்பித்தனர்.
இந்த வேன்களை அக்கால கட்டத்தில் ஆய்வாளர் விஜயகுமார் ஆய்வு செய்தார். விதிப்படி பயணிகளை ஏற்றி செல்லும் வேன் டிரைவருடன் சேர்த்து 13 பயணிகள் அமரும் விதத்தில் மட்டுமே சீட் இருக்க வேண்டும். ஆனால் 3 வாகன உரிமையாளர்கள் பஸ் போன்று டிரைவருடன் சேர்த்து 26 பயணிகள் அமரும் விதத்தில் சீட்களை மாற்றியிருந்தனர்.
இதுபோன்று வேனை மாற்றி அமைக்க அரசு போக்குவரத்துத் துறை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். தவறியிருந்தால் வேன்களின் உரிமையாளர்கள் மீது ரூ.3.72 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வேண்டும். ஆனால் 3 வேன் உரிமையாளர்களிடம் அபராதத்தை வசூலிக்காமல் அனைத்து வேன்களுக்கும் உறுதி தன்மை சான்று அளித்துள்ளார் ஆய்வாளர்.
இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் தற்போது ஓசூரு வட்டார போக்குவரத்து ஆய்வாளராக உள்ளார்.

