ADDED : அக் 17, 2024 11:15 PM
சென்னை:மழைக்கு பிந்தையநோய் தொற்றுகளை தடுக்க, சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு, தடுப்பு மருந்துகள் வழங்க, பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, அதன் இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் மழைக்கு பிந்தைய நோய் பாதிப்புகளை தடுப்பதற்கான செயல் திட்டத்தை, பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக, எலிக்காய்ச்சலை தடுக்க, 'கீமோப்ரோபிலாக்சிஸ்' மருந்துடன், 'டாக்ஸிசைலின்' மாத்திரை 200 மி.கி., அளவில் வழங்க வேண்டும்.
சுகாதாரத் துறையினர், முன்களப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், செய்தியாளர்கள் என, மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்க வேண்டும்.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவைக்கு ஏற்ப, அப்பகுதி மக்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸின், பி காம்ப்ளஸ்' ஆகிய கிருமி தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும் என, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.