ADDED : அக் 12, 2025 03:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அனைவரையும் அரவணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஜனவரிக்கு பின்னரே கூட்டணி முழு முடிவுக்கு வரும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தார்.
அவர் கூறியதாவது : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 120 க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பா.ஜ., தமிழக தலைவர் என்ற முறையில் இன்று மதுரையில் தேர்தல் பிரசார பயணத்தை துவக்குகிறேன். தற்போதைய அரசு ஒரு விடியாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் வந்துவிட்டால் பா.ஜ.,வை பழனிசாமி கழட்டி விடுவார் என்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரனின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது. அவருக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. அவரது சொந்த பிரச்னைக்காக கட்சியைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்பது என் கருத்து.
கரூர் சம்பவத்தை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷன் குறித்து நாம் கருத்து சொல்லக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை. கரூர் சம்பவத்தில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் நடவடிக்கைகள் அவரது விசாரணைக்கு பின்பே தெரிய வரும்.
சென்னையில் வழக்கறிஞரை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆட்கள் தான் அடித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
தமிழகத்தில் தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், மீண்டும் ஆட்சியைப்பிடிப்போம் என ஆளுங்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.