ADDED : ஜூலை 13, 2025 05:03 AM

மதுரை: 'நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால், இனி குண்டர் சட்டம் பாயும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
நிறுவன நிர்வாகிகளுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும். நிறுவன சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாத பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, சில வழக்குகள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கலாகின.
ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, 'பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏன்? அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?' என கேள்வி எழுப்பி, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதம்:
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பல்வேறு அரசாணைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் மோசடிகளை தவிர்க்க முடியும். எம்.ஆர்.டி.டி., நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களில், 5,138 பேருக்கு, 25 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வாதிட்டார்.
அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி தாக்கல் செய்த பதில் மனு:
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் வரை நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருந்தால், சொத்துக்களை பறிமுதல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் சொத்துக்களை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டோருக்கு தொகையை வழங்க முடியும். 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருந்தால், டி.ஆர்.ஓ., மற்றும் எஸ்.பி., இணைந்து சொத்துக்களை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டோருக்கு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். நிதி நிறுவனத்தின் பட்டா, சிட்டா, அடங்கலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிதி நிறுவன மோசடி வழக்குகளை விரைந்து முடிக்க, சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனரை தலைவராக, வருவாய்த்துறை நிர்வாக கமிஷனரை தனி அதிகாரியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவன வங்கி கணக்குகளை முடக்க, வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாக இ மெயில் அனுப்ப வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள், தளவாடங்களை நீதிமன்ற அனுமதியுடன், மின்னணு முறையில் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி, ''பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட, தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.