அடுக்குமாடி கட்டட கூட்டு மதிப்பு விதிகள் திருத்தம்: பதிவுத்துறை உத்தரவு
அடுக்குமாடி கட்டட கூட்டு மதிப்பு விதிகள் திருத்தம்: பதிவுத்துறை உத்தரவு
ADDED : ஆக 20, 2026 09:17 PM

சென்னை: தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் விதிமுறைகளை திருத்தி அமைத்து, பதிவுத்துறை உத்தரவிட்டுஉள்ளது.
தமிழகத்தில், 'அடுக்குமாடி திட்டங்களில், வீடு விற்பனையை, கூட்டு மதிப்பு அடிப்படையில்தான் பதிவு செய்ய வேண்டும்' என, 2023 டிச.,1ல் அரசு உத்தரவிட்டது. இதன்படி கட்டடங்களுக்கு, அதன் வகை, வசதிகள் அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், தெரு வாரியாக கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே தற்போது அமலில் உள்ளது.
இந்நிலையில், தெரு மதிப்பு என்பதை மாற்றி, ஒவ்வொரு திட்டத்துக்கும், அதன் வகைப்பாடு அடிப்படையிலும், உள்ளாட்சிகள் நிலை அடிப்படையிலும், கூட்டு மதிப்பு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டட மதிப்பு, பொதுப்பணித்துறை மதிப்பு அடிப்படையில், கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். இதில் உள்ளாட்சிகள் நிலை, வீடு வாங்குவோரின் வருவாய் வகைப்பாடு அடிப்படையில் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
இதன்படி, குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளில், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில், ஒரு சதுரடி 2,180 ரூபாய், நகராட்சிகளில் ஒரு சதுரடி, 1,920 ரூபாய், பிற பகுதிகளில், 1,840 ரூபாய் என்ற அடிப்படை மதிப்பை கருத்தில் வைத்து, கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். உயர் வருவாய் பிரிவு, எலைட், சொகுசு வகை வீடுகளுக்கு, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், ஒரு சதுரடி, 3,230 ரூபாய், நகராட்சிகளில், ஒரு சதுரடிக்கு, 2,840 ரூபாய், பிற பகுதிகளில் ஒரு சதுரடிக்கு, 2,710 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்.
கட்டடத்தின் மதிப்பில், ஆண்டுக்கு ஒரு சதவீதம், தேய்மானமாக கணக்கீடு செய்யலாம்.இதன் அடிப்படையில், மையக்குழு வழிகாட்டுதலின்படி, மாவட்டப் பதிவாளர்கள் கூட்டு மதிப்புகளை நிர்ணயிக்கலாம். அந்த மதிப்பை ஏற்பதில், மாறுபட்ட கருத்து இருந்தால், பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யிடம் மேல்முறையீடு செய்யலாம்.ஏற்கனவே, டி.ஐ.ஜி., நிர்ணயித்த கூட்டு மதிப்பு தொடர்பான, மேல்முறையீடுகள் அனைத்தையும், கூட்டு புலனாய்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
