ADDED : அக் 05, 2024 01:25 AM

சென்னை:அப்பல்லோ மருத்துவ குழுமம் சார்பில், தேனாம்பேட்டை பகுதியில், 1993ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனை துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனை துவங்கி, 31 ஆண்டுகள் ஆவதையொட்டி, அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு:
அப்பல்லோ புற்றுநோய் மையத்தினர் மற்றும் அதை சார்ந்த அனைவருக்கும், இந்நேரத்தில், நான் நன்றியை கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் தான், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திலும், முன்களத்திலும் முன்னின்று, அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை அளிக்க, அப்பல்லோ மருத்துவமனை, 23 மையங்களாக விரிவடைந்துள்ளது.
அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் மீது, நோயாளிகள் வைத்துள்ள நம்பிக்கை, குழுமத்தினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இவை, புற்றுநோயை வென்றெடுப்பதற்கான எங்களின் உயர்ந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கிறது.
இவ்வாறு, பதிவில் கூறப்பட்டுள்ளது.