பிழையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு மன்னிப்பு கேட்கணும்: பா.ம.க., அன்புமணி கறார்!
பிழையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு மன்னிப்பு கேட்கணும்: பா.ம.க., அன்புமணி கறார்!
UPDATED : அக் 25, 2024 07:05 PM
ADDED : அக் 25, 2024 06:58 PM

சென்னை : '' தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறிள்ளதாவது; தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டுள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்டு இரண்டாவது முறையாக பாடப்பட்ட போதும் பிழைகளுடனே பாடப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசு நிகழ்ச்சியில் பிழைகளுடன் பாடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடன் தான் பாடப்பட்டது. அதுவும் வேதனையளிக்கக் கூடியது தான். இரு நிகழ்வுகளுமே மனிதப் பிழைகள் தான்; இரு நிகழ்வுகளிலுமே உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிவார்கள்.
ஆனால், சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த தவறுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒரு தரப்பினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதன் எதிரொலியாக இன்றைய நிகழ்ச்சியில் நடந்த தவறை இன்னொரு தரப்பினர் சர்ச்சையாக்குகின்றனர். இரண்டுமே தவறான அணுகுமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுவதை உறுதி செய்வதில் தான் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியலாக்குவதால் எந்த பயனும் இல்லை.
சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டதைப் போன்று, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறை மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நிகழ்வதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளிலும் உள்ள பணியாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பிழையின்றி பாடுவதற்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சியளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.