கோர்ட் நடவடிக்கையில் தலையிட ஓய்வு நீதிபதிகளுக்கு எதிர்ப்பு; ஐகோர்ட்டில் முறையீடு
கோர்ட் நடவடிக்கையில் தலையிட ஓய்வு நீதிபதிகளுக்கு எதிர்ப்பு; ஐகோர்ட்டில் முறையீடு
ADDED : ஜூலை 29, 2025 05:07 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாதிய ரீதியில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கூறி, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், புகார் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கும் வரை, வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடக்கோரி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் .
இந்த கடிதம், சமூக வ லைதளங்களில் பரவிய நிலையில், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், பத்திரிகையாளர் வாராகி சார்பாக, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி முறையீடு செய்தார்.
நீதிபதிகள், 'நிர்வாக ரீதியாக இந்த விவகாரம், உயர் நீதிமன்றத்தால் கையாளப்படும்' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கையை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கைவிடக்கோரி, ஜனநாயக மற்றும் சமூக நலனுக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில், சென்னை ஐகோர்ட் நுழைவு வாயில் முன், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

