ஆன்லைன் ரம்மி தொடரவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தி.மு.க., அரசின் கெட்ட எண்ணம் என்கிறது அ.தி.மு.க.,
ஆன்லைன் ரம்மி தொடரவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தி.மு.க., அரசின் கெட்ட எண்ணம் என்கிறது அ.தி.மு.க.,
ADDED : நவ 28, 2024 06:46 AM

கள்ளக்குறிச்சி; ''தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடால், தி.மு.க., ஆட்சி திறமையற்ற ஆட்சி என்பது நிரூபணமாகி உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
உளுந்துார்பேட்டையில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணி நடக்கிறது. இக்கோவிலில் அன்னதான கூடம் கட்டுமான பணியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சென்னையில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்காக அ.தி.மு.க., ஆட்சியில் வடிகால் வசதி செய்ய திட்டமிடப்பட்டு, 1,240 கி.மீ., மழைநீர் வடிகால் பணிகள் துவங்கப்பட்டன. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 43 மாதம் நிறைவு பெற்றுவிட்டது.
இன்னும் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும், சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கும்.
ஆனால் தி.மு.க., அரசு, அதற்கு உரிய முயற்சி எடுக்கவில்லை. ஆகையால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கே காரணம்.
ஆன்லைன் ரம்மி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான், தி.மு.க., தரப்பு உள்ளது. அதனாலேயே, இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையை ஏற்காமல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற ஆலோசனைப்படி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு, சட்டசபையில் தனி சட்டம் இயற்றப்பட்டிருந்தால், இதற்கு உரிய தீர்வு கிடைத்திருக்கும். தி.மு.க., அரசின் கெட்ட எண்ணமே இதற்கெல்லாம் காரணம்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, திருட்டு குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இதன் வாயிலாக தி.மு.க., அரசு திறமையற்ற அரசு என்பது நிரூபணமாகி உள்ளது. தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம் - ஒழுங்கை முழுமையாக பாதுகாக்க வேண்டும். இதை மக்கள் நலனுக்காக, அரசிடம் கோரிக்கையாகவே வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.