ADDED : ஆக 13, 2025 03:58 AM
சென்னை: ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு, ஏழு மாதங்களுக்கு பின், நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
ஆவின் நிறுவனத்தில், 'டெக்னிக்கல் ஆப்பரேட்டர், கம்ப்ரஸர் ஆப்பரேட்டர், பால் பாக்கெட் மிஷின் ஆப்பரேட்டர்' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க, கடந்த ஆண்டு நவம்பரில், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வின் முடிவுகள் வெளியாகின.
தேர்வு முடிவு வெளியாகியும், நிர்வாக காரணங்களால் பணி நியமனத்திற்கான கவுன்சிலிங் தள்ளிப் போடப்பட்டு வந்தது.
பின், கடந்த ஜூனில் கவுன்சிலிங் நடந்தது. ஜூலையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தேதி கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்த செய்தி, நம் நாளிதழில், கடந்த 10ம் தேதி வெளியானது.
இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆவின் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.