ADDED : செப் 30, 2023 07:42 AM
மதுரை : தமிழக வருவாய்த்துறையில் 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறைகளில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. வருவாய்த்துறையிலும் இந்நிலை உள்ளது. இவற்றை நிரப்ப வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் உட்பட பல அமைப்புகள் போராடி வருகின்றன.
இதையடுத்து அனைத்து மாவட்ட வருவாய்த்துறையிலும் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதித்து செப்.,27 ல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பணியிடங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர்களே விதிகளுக்குட்பட்டு நிரப்பலாம். மூன்றாண்டுகளுக்கு கீழ் என்பது 1.1.2020 முதல் 31.12.2022 வரையான காலத்தில் காலியாக உள்ள இடங்களாகும்.
மாநில அளவில் 36 மாவட்டங்களில் 564 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சிவகங்கையில் 42 இடங்கள், தஞ்சை 35, தேனி 30, ஈரோடு 24, திண்டுக்கல், திருவாரூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 23, மயிலாடுதுறை 22, உள்ளன.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் கூறுகையில், ''மாநில அளவில் 1400 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 3 ஆண்டுகளுக்குட்பட்ட பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி. இவற்றை வேலைவாய்ப்பு அலுவலகம், பத்திரிகை அறிவிப்பு உட்பட வழிகாட்டுதல் நெறிப்படி மாவட்ட அதிகாரிகளே நிரப்புவர்'' என்றார்.