ADDED : பிப் 18, 2024 04:48 AM
சென்னை, : தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக, செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக, 2019ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்தது. அவர் ஐந்து ஆண்டுகளாக நீடிப்பதால், தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என, தகவல் வெளியானது. அப்பதவிக்கு, முன்னாள் தலைவர்கள் பலரும் முயற்சித்தனர்.
இந்நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை காங்கிரஸ் தலைவராக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளசெல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம், புதியதமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றில் இருந்தவர்; பகுஜன் கட்சி மாநில தலைவராகவும் இருந்தவர். கடந்த 2010ல், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த 2006ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலுார் மாவட்டம், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 சட்டசபை தேர்தலில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.