தற்காலிக பஸ் ஊழியர்கள் நியமனம்: பண்டிகை கால பயணம் 'ரிஸ்க்' தான்
தற்காலிக பஸ் ஊழியர்கள் நியமனம்: பண்டிகை கால பயணம் 'ரிஸ்க்' தான்
ADDED : அக் 08, 2024 04:47 AM

சென்னை: அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்கல் பிரிவு என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பிரிவில், 30 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கத்தை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.
எனவே, தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்க, நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்க உள்ளோம்.
ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும், தலா 1,600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளோம். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யும் போது, தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தற்காலிக பணியாளர் நியமனம் என்பது நிரந்தர தீர்வு அல்ல. அனைத்து நாட்களிலும் பணி கிடைக்காது என்பதால், தற்காலிக பணிக்கு வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
மேலும், சென்னை போன்ற மாநகரங்களில் பஸ்களை ஓட்ட முடியாமல், அவர்கள் திணறுகின்றனர். தற்காலிக பணியாளர்கள் வாயிலாக அரசு பஸ்களை இயக்கினால் பயணியர் பத்திரமாக ஊர் போய் சேருவது சிரமம்தான்.
எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வாக, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.