பழனிசாமிக்கு பாராட்டு விழாவா? அமைச்சர் துரைமுருகன் வியப்பு
பழனிசாமிக்கு பாராட்டு விழாவா? அமைச்சர் துரைமுருகன் வியப்பு
ADDED : நவ 14, 2024 05:42 AM

சென்னை: சரபங்கா நீரேற்று திட்டத்தை நிறைவேற்றியதாக, பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது விந்தையாக உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை, சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 79 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டம், 2020 மே மாதம் துவங்கப்பட்டது.
அப்போது திட்ட மதிப்பீட்டுத் தொகை 565 கோடி ரூபாய். தி.மு.க., அரசு பதவியேற்பதற்கு முன், 404 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில், 33 கி.மீ., நீளத்திற்கு இரும்புக் குழாய்கள், மின் மோட்டார்கள், வால்வுகள், இதர உபகரணங்கள் வாங்குவதற்கு, 312 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கு 287 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. அதில், 48 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு, பழனிசாமி ஆட்சியில் எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு, 673 கோடி ரூபாய். இத்திட்டம் வாயிலாக செக்கான் ஏரி, கொத்திக்குட்டை ஏரி, பி.என்.பட்டி ஏரிக்கும் நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 252 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. மூன்று நீரேற்று நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 27 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, 33 கி.மீ.,க்கு இரும்புக் குழாய் பைப் லைன்கள் பதிக்கப்பட்டன.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது வரை, 56 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டு, 40 ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு உள்ளது.
முதலில், 100 ஏரிகளுக்கு நீர் வழங்க திட்டமிட்டாலும், அரசாணையில் 79 ஏரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதில், 21 ஏரிகள், பட்டா குட்டை என்பதால், அவை திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் 30 சதவீதப் பணிகள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 70 சதவீதப் பணி முடிக்கப்பட்டு, திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, இத்திட்டத்தை பழனிசாமி முழுமையாக செய்து முடித்தது போன்று சித்தரித்து, எம்.காளிப்பட்டி விவசாய சங்கங்கள் பாராட்டு விழா நடத்துவது விந்தையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.