அடுக்குமாடி திட்டங்களுக்கு 21 நாளில் அனுமதி; ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு
அடுக்குமாடி திட்டங்களுக்கு 21 நாளில் அனுமதி; ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு
ADDED : ஜூன் 26, 2026 07:24 PM

சென்னை: அடுக்குமாடி திட்டங்களுக்கு, 21 நாட்களில் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவை சார்பில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த, 2023ல் ஒற்றைச் சாளர முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, கட்டட வரைபடங்களை விரைவாக ஆய்வு செய்து முடிக்கலாம். இதன்பின், தடையின்மை சான்றுகள் வழங்குவதும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது.
இதனால், தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டிய துறைகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பதில் அளிக்காத நிலையில், தானாகவே தடையின்மை சான்றிதழ் உருவாக்கப்படும்.
இந்த அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டும், தற்போது கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க, 50 நாட்கள் வரை ஆகின்றன. இதை, 30 நாட்களாக குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், 10,000 சதுர அடி வரையிலான திட்டங்களுக்கு, 27 நாட்களில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோன்று, அடுக்குமாடி திட்டங்களுக்கு, 21 நாட்களில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டுமான திட்டங்களுக்கு மிக குறுகிய காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். அரசின் தலையீடு இன்றி, அதிகாரிகள் நிலையிலேயே ஒப்புதல் வழங்க அதிகாரம் பரவலாக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான திட்ட விண்ணப்பங்கள், ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையிலான மென்பொருளை உருவாக்கி, ஒற்றைச் சாளர முறை இணையதளத்தில் சேர்க்க இருக்கிறோம். இதனால், ஆவணங்கள் மீதான ஆய்வை, சில மணி நேரங்களில் முடிக்க வாய்ப்பு ஏற்படும். விரைவாக கட்டட அனுமதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
