ADDED : செப் 18, 2025 01:21 AM
சென்னை:அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி, பட்டா அளிப்பதற்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அரசுக்கு சொந்தமான நிலங்களில், பொது மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், அரசுக்கு ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி, பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
சென்னை உள்ளிட்ட, 29 மாவட்டங்களில் உள்ள அரசு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரிகள் தனித்தனி கோப்புகளை தயாரித்தனர்.
இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், மாநில அளவிலான குழுவுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு நில ஆக்கிரமிப்பு வரன்முறை கோப்புகளை, மாநில குழு கூட்டத்தில் தாக்கல் செய்ய, வருவாய் துறை முடிவு செய்தது.
அதன்படி, அரசு நில ஆக்கிரமிப்பு வரன்முறைக்கான மாநில குழுவின் ஐந்தாவது கூட்டம் நேற்று நடந்தது. அதில், பல்வேறு துறை அதிகாரிகள், 27 கலெக்டர்கள், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்று, ஆக்கிரமிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, வீட்டு மனை பட்டா வழங்க தொகுப்பு அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.