'கண்ணுக்கு தெரியாத முடிவு' சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
'கண்ணுக்கு தெரியாத முடிவு' சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : நவ 21, 2024 01:19 AM

சென்னை:'எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது' என, மனைவியின் விவாகரத்து அறிவிப்பு குறித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
முப்பதாவது ஆண்டை எட்டுவோம் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட, உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும் இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம்.
எங்கள் நண்பர்களுக்கு...
இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது, உங்கள் கருணைக்கும், எங்கள் தனி உரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கூறியுள்ளதாவது:
இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான், நாதமே பிறக்கும். 'குடைக்குள் மழை' படம் நான் எழுதி, கார்த்திக் ராஜா இசையமைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல; புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி விலகி நின்று, அவரவர் விருப்பம் போல வாழ, இனிய வழியுள்ளதா என, சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போல், ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து, அமைதிக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

