தொல்லியல் ஆய்வுகளை நேரில் மேற்கொள்ள வேண்டும்: அறிஞர் சத்தியமூர்த்தி பேச்சு
தொல்லியல் ஆய்வுகளை நேரில் மேற்கொள்ள வேண்டும்: அறிஞர் சத்தியமூர்த்தி பேச்சு
ADDED : மே 19, 2025 03:02 AM

சென்னை: “சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அடிப்படையில், தொல்லியல் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்வது தவறானது,” என, தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மத்திய தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில், 2015 - சர்வதேச அருங்காட்சியக தின விழா, சென்னை கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேசியதாவது:
சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அடிப்படையில், தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்வது தவறானது. எனவே, தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுகளை, நேரில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், அவை நம்பகத்தன்மையுடன் இருக்கும்.
வரலாற்று இடங்களை வீடியோ வாயிலாக பார்ப்பதை தவிர்த்து, உணர்வுபூர்வமான அனுபவத்தை பெற, மக்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும். பெருங்கற்காலத்தில், இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதற்காக, கல்வட்டங்கள் அமைக்கும் முறை இருந்தது.
அதற்கான சான்றுகளாக, தமிழகம் முழுதும் 700 பெருங்கற்கால கல்வட்டங்கள்; சென்னையில் மட்டும் 29 கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 3,500 ஆண்டுகள் பழமையானவை.
ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நவீனமயமாக்கும் செயல்களால், கல்வட்டங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க, கல்வட்டங்களை சுற்றி 100 மீட்டருக்கு, வீடு கட்டுவது உள்ளிட்ட சேதப்படுத்தும் பணிகளில் ஈடுபடக்கூடாது.
அவற்றை முறையாக கடைப்பிடித்து, நம் பண்பாடு மற்றும் வரலாற்றை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை, சென்னை வட்டார கண்காணிப்பாளர் சுஷாந்த் குமார்கார் பேசியதாவது:
பல்லவர் கால குடைவரை கோவில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. அதை பார்க்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு பல்லவர்களின் கட்டடக்கலை சிறப்புகளை, ஒலி மற்றும் ஒளி முறையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு மத்திய தொல்லியல் துறை உதவி வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.