ADDED : ஆக 09, 2026 11:04 PM

சென்னை: மைசூரு பல்கலை தொல்லியல் துறை முன்னாள் தலைவரும், தொல்லியல் அறிஞருமான நரசிம்மமூர்த்தி, 91, நேற்று காலமானார்.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. ஆந்திர பல்கலையில், தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, மத்திய தொல்லியல் துறையில், தொல்லியல் ஆய்வாளராக பணியாற்றினார். பின், மைசூரு பல்கலையில், தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்று துறையில், பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணிபுரிந்தார். ஹார்வர்டு பல்கலை மற்றும் பல்கலை மானிய குழுவின் தகைசால் உறுப்பினராகவும் இருந்தார். அவரின் வழிகாட்டுதலில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.
'தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து, சென்னையில், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தை உருவாக்கினார். தென்னிந்திய நாணயவியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றுக்கு ஆதாரமாக, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
தென்னிந்திய நாணயவியல் இதழின் ஆசிரியராக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். தொல்லியல் மற்றும் நாணயவியல் சார்ந்த முக்கிய தகவல்களுடன், 18 இதழ்களை வெளியிட்டார். பெங்களூரில், 1993ல் நடந்த, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் மூன்றாவது மாநாட்டிற்கும், வாரணாசி இந்திய நாணயவில் சங்க மாநாட்டிற்கும், தலைவராக செயல்பட்டு, மாநாட்டை சிறப்பாக நடத்தினார். அரசுக்கு நாணயங்கள் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
மறைந்த தொல்லியல் அறிஞர் நரசிம்மமூர்த்திக்கு, கமலாம்பா என்ற மனைவி, சந்தோஷ்குமார் என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தற்போது, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., அறிவியல் தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தராக உள்ளார்.
