தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்திற்கு மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை
தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்திற்கு மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை
ADDED : ஏப் 15, 2025 04:45 AM

நாகப்பட்டினம்: நாகை அருகே பிரசித்திப்பெற்ற தர்கா சந்தனம் பூசும் நிகழ்வுக்கு தேவையான சந்தனம் மற்றும் மங்கள பொருட்களை, மீனவர்கள் மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து சீர்வரிசையாக தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினர்.
நாகை அடுத்த கல்லாரில் பிரசித்திப் பெற்ற மஹான் ஹழ்ரத்து மலாக்கா சாஹிப் என்ற ஹலிபத்து ஷெய்கு முறையதீன் ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 426 ஆண்டுகள் பழமையான இத் தர்காவில் ஆண்டு தோறும் கந்துாரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மதத்தை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்பதால், நாகை மாவட்ட கடலோர பகுதி, களை கட்டும்.
இந்தாண்டு 426 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் நேற்று அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.
சந்தனம் பூசும் வைபவத்திற்காக, அக்கரைப்பேட்டை கிராம மீனவர்கள், பாரம்பரிய ஐதீக முறைப்படி, முத்துமாரியம்மன் கோவிலில் 10 கிலோ எடையுடைய சந்தனம் அரைத்து தயார் செய்தனர். சந்தனக்குடம், பட்டுப் போர்வை மற்றும் மங்களப் பொருட்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் சீர் வரிசையாக தர்காவிற்கு எடுத்து சென்றனர். சீர் வரிசையுடன் வந்த மீனவர்களை, ஆரத் தழுவி வரவேற்ற தர்கா நிர்வாகிகள், தர்கா சன்னதிக்குள் அழைத்துச் சென்று கவுரப்படுத்தினர். தொடர்ந்து சந்தனம் பூசம் வைபவம் நடந்தது.
ஹிந்து கோவிலில் அர்ச்சனை செய்த சந்தன்ததைகொண்டு, தர்காவில் நடந்த சந்தனம் பூசும் வைபவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அக்கரைப்பேட்டை மீனவர்கள் கூறுகையில், எங்கள் கிராம முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, கல்லார் முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்து வந்து வெண்கல ஆலய மணி வழங்கினர்.
நாங்கள் முதல் முறையாக சந்தனம் பூசும் வைபவத்திற்கு தேவையான சந்தனம் வழங்கினோம். இது தொடரும் என்றனர்.