ADDED : பிப் 21, 2024 01:21 AM

என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு அமல்படுத்திய தேர்தல் பத்திரங்கள் செல்லாது' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பா.ஜ.,விற்கு மட்டுமே எதிரானது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க, நம் எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சி செய்வது கேலிக்குரியது.
தேர்தல் பத்திரம் வாயிலாக, அதிக அளவில் பயனடைந்தது, பா.ஜ., என்றாலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளும், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், தி.மு.க., போன்ற மாநிலக் கட்சிகளும், பயன் அடைந்திருப்பதை மறுக்க முடியாது.
பா.ஜ., 6,568 கோடி காங்கிரஸ் 1,547 கோடி, திரிணமுல் காங்கிரஸ் 823 கோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 367 கோடி தி.மு.க., 616 கோடி, பிஜு ஜனதா தளம் 152 கோடி தெலுங்கு தேசம் 34 கோடி பெற்றிருக்கும் அவலம், தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
இந்த லட்சணத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி, சிதம்பரம், ஸ்டாலின் போன்ற தலைவர்கள், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, தங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பது போல, கருத்து தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
இதன் வாயிலாக, தங்களை உத்தமர்கள் போல அடையாளம் காட்ட இவர்கள் முற்படுகின்றனர். அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் செலவை சமாளிக்க, தொழிலதிபர்களிடம் நிதி வசூல் செய்வதில் போட்டி போடும் அவலத்தை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இதில், பா.ஜ., கட்சியை மட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறை சொல்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் பத்திரம் செல்லாது என்று, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வாழ்த்தி வரவேற்பதை பார்க்கும்போது, 'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்ற, பழைய திரைப்பட பாடல் தான் நம் நினைவிற்கு வருகிறது.

