தேவேந்திரகுல வேளாளர்கள் 'கோழை'களா? 'வாழை' படம் குறித்த கிருஷ்ணசாமி கடுப்பு
தேவேந்திரகுல வேளாளர்கள் 'கோழை'களா? 'வாழை' படம் குறித்த கிருஷ்ணசாமி கடுப்பு
ADDED : ஆக 29, 2024 05:05 AM

சென்னை: 'வாழை படத்தின் வாயிலாக, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம்' என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
அவரது அறிக்கை:
தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வாழும் தேவேந்திர குல வேளாளர்களே, இன்றும் சிறுநில உடைமையாளர்களாக இருக்கின்றனர். எந்தவொரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும், தன் நிலத்திலும் உழவு செய்வார். அண்டை விவசாயி நிலத்திலும் உழவும் செய்வார்.
களை எடுக்கவும் செய்வார். நெல்லையும் அறுப்பார். வாழையும் சுமப்பார். அது அடிமைத்தனமும் அல்ல; சுரண்டலின் மொத்த வெளிப்பாடும் அல்ல. நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்ததுதான் இம்மக்களின் வரலாறு; சுமந்து கொடுத்தது அல்ல.
வாழையை பற்றி பேசும்போது, மாபெரும் ஒரு சமுதாயத்தை கோழையாக்குகின்ற பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது. தான் இழந்த அடையாளத்தை, அதிகாரத்தை மீட்கப் போராடுகிற ஒரு சமுதாயத்தை, பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்.
ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்து, சிறுமைப்படுத்துகிற போக்கு ஏற்புடையது அல்ல. அவர்களின் போராட்ட உணர்வுகளையும், குணங்களையும் மழுங்கடித்து யார், யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்து கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
எனினும், வாழை படத்தின் இயக்குனர் மாரிமுத்துவை பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை; திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

