ADDED : ஜூன் 01, 2025 06:47 AM

கோவை : வாகன தணிக்கையின் போது நகல் ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் போலீசாரின் வாகன தணிக்கையின் போது, அசல் அல்லது நகல் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல் முறையிலான ஆவணங்களை காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், பெரும்பாலான வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டனர். 'டிஜிலாக்கர்', 'எம் பரிவாகன்' செயலிகளில், தங்கள் வாகனங்களின் விவரங்களை பதிவேற்றினால், அதில் வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் டிஜிட்டலாக வந்து விடுகிறது. இதை போலீசாரின் வாகன சோதனையின் போது காண்பிக்கலாம்.
மழைக்காலங்களில் நகல் மழையில் நனைந்து விடுவது, சேதமாவது உள்ளிட்டவைகளில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பினர். ஒரு சிலர் இன்சூரன்ஸ் காலம் முடிந்த பின்பும், புதுப்பிக்காமல், நகலை 'ஸ்கேன்' அதில் எடிட் செய்து மாற்றி, போலி நகலை தயார் செய்து போலீசாரை ஏமாற்றி வந்தனர். டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களில் மாற்றம் செய்ய முடியாது.
ஆனால், ஒரு சில போலீசார், அசல் அல்லது நகல் ஆவணங்களை காண்பிக்குமாறு கட்டாயப்படுத்துவதால், வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செயலிகளில் காண்பிக்கும் டிஜிட்டல் ஆவணங்களே போதுமானதுதான். எல்லோரிடமும் போலீசார் அசல் ஆவணங்களை கேட்பதில்லை. இரவு நேரங்களில், சந்தேகப்படும்படியாக வரும் வாகன ஓட்டிகளிடம் மட்டுமே, அசல் ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
பல்வேறு குற்றச்சம்பவங்கள், திருட்டு வாகனங்களை பயன்படுத்தியே நடக்கின்றன. இதனால், சந்தேகப்படும் நபர்களிடம் மட்டுமே அசல் ஆவணம் கேட்கப்படுகிறது.
'வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகளிடம், அசல் அல்லது நகல் ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.