ஒத்துழைப்பு தர்றாங்களா; ஓரங்கட்டுறாங்களா?: மா.செ.,க்கள் குறித்து இபிஎஸ் விசாரணை
ஒத்துழைப்பு தர்றாங்களா; ஓரங்கட்டுறாங்களா?: மா.செ.,க்கள் குறித்து இபிஎஸ் விசாரணை
ADDED : நவ 03, 2025 12:29 AM

சென்னை: 'மாவட்டச் செயலர்களின் உறுதுணையோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கண்காணித்து, அதன் விபரங்களை கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்' என, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று காலை, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ஐ.டி., அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், ஐ.டி., அணி மாவட்ட பொறுப்பாளர்களுடன், பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
மாவட்டச் செயலர்கள், ஒன்றிய, நகரச் செயலர்களின் செயல்பாடுகள் குறித்து, அவர்களிடம் விசாரித்துள்ளார்; உட்கட்சி பிரச்னைகள் ஏதும் உள்ளதா என்பதையும் கேட்டறிந்து உள்ளார்.
குறிப்பாக, ஐ.டி., அணி பொறுப்பாளர்களுக்கு, மாவட்டச் செயலர்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனரா அல்லது ஓரங்கட்டுகின்றனரா என கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.
இதுவரை, ஐ.டி., அணியினர் செய்த பணிகள் குறித்தும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை வீடுதோறும் சேர்ப்பது குறித்தும் அறிவுரைகள் கூறினார்.
தமிழகத்தில் நாளை துவங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, அவர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாலையில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
அதில், பழனிசாமி பேசியுள்ளதாவது:
அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் தி.மு.க., கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்தி, திசை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இறந்தவர்கள், முகவரி மாற்றப்பட்டவர்களின் பட்டியலை சரிபார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு, பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்கள் உறுதுணையோடு, தங்களுக்கான மாவட்டங்களுக்கு நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கண்காணிக்க வேண்டும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நாளை துவங்குகிற இந்த பணியை, ஒரு மாதத்திற்குள் முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட பட்டியல் விபரங்களை, கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

