சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்க தயாரா; முதல்வருக்கு அன்புமணி கேள்வி
சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்க தயாரா; முதல்வருக்கு அன்புமணி கேள்வி
ADDED : டிச 10, 2024 02:28 PM

சென்னை: அதானி ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார்; மின்வாரிய ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசு தயாரா என முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டசபையில் பேசும் போது, 'அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க., மீது குறை சொல்லி கொண்டு இருக்கும் பா.ஜ.,வோ, பா.ம.க.,வோ, பார்லிமென்டில் இந்த கோரிக்கை ஆதரிக்க தயாராக இருக்கிறதா?' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
நாங்க தயார்!
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பார்லி., கூட்டுக்குழு விசாரணையோ, அல்லது வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்க பா.ம.க., தயாராக இருக்கிறது. இதில் பா.ம.க.,வுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக என்னிடம் கேட்டபோது, அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன்.
நேரடி ஒப்பந்தம்
முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்து எதுவும் தெரியாது போல் இருக்கிறது. அதனால் தான் சட்டசபையில் இப்படியொரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதானி குழுமத்திற்கும் தமிழக மின்சார வாரியத்திற்கும் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டிருப்பதாக பா.ம.க. ஒரு போதும் கூறவில்லை.
அதானி குழுமம் தயாரித்த மின்சாரத்தை இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டுக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே, அது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
பதில் கூற மறுப்பது ஏன்?
மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. அதானி குழுமத்திடம் இருந்து, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக தமிழக மின்சார வாரியம் கையூட்டு பெறவில்லை என்றால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடலாம். அவ்வாறு செய்யாமல், இந்த சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?
நீங்க ரெடியா?
அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படுவதை பா.ம.க., முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், தமிழக மின்வார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கோ ஆணையிடுவதற்கு தயாரா? என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.