இலவச வேட்டி, சேலை கேட்டு ரேஷன் ஊழியர்களுடன் தகராறு
இலவச வேட்டி, சேலை கேட்டு ரேஷன் ஊழியர்களுடன் தகராறு
ADDED : ஜன 16, 2025 12:28 AM

சென்னை : தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், 2.21 கோடி அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் பயன்பெறுவர் என்று, அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, அரிசி கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா, 1.77 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகள் வாயிலாக, இம்மாதம் 9ம் தேதி துவங்கியது. கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு முழுவதுமாக அனுப்பப்பட்டது. வேட்டி, சேலைகள், 50 - 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டன.
அவற்றின் வினியோகம் இரு தினங்களில் முடிந்தது. வேட்டி, சேலை கிடைக்காதவர்கள் அவற்றை கேட்டு ரேஷன் கடை ஊழியர்களுடன், தகராறில் ஈடுபட்டனர். மோதலை தவிர்க்க, பல கடைகளில் வேட்டி, சேலை இருப்பு இல்லை என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
பொங்கல் தொகுப்பை இம்மாதம், 13ம் தேதி வரை வாங்கலாம் என்று அரசு அறிவித்தது.
ஆனால், ஒவ்வொரு கடைக்கும், கார்டுதாரர்களின் எண்ணிக்கையில், பாதி கூட வேட்டி, சேலைகள் அனுப்பவில்லை. இதனால், பல கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. முதலில் வந்தவர்களுக்கு மட்டும் வேட்டி, சேலை வழங்கப்பட்டன.
அவற்றை பெற முடியாதவர்கள், ஊழியர்கள் எடுத்துக் கொண்டு தரவில்லை எனக்கருதி, 'வேட்டி, சேலை தந்தால் தான் கடையை விட்டு செல்வோம்' என, பொங்கலுக்கு முந்தைய நாள் வரை தகராறில் ஈடுபட்டனர். இந்த தகவல் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அவர்கள், 'வரும், 31ம் தேதி வரை வேட்டி, சேலை, கடைகளுக்கு அனுப்பப்படும்; அதற்கு ஏற்ப வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறுங்கள்' என்றனர். இதை தெரிவித்தும், கார்டுதாரர்கள் ஏற்கவில்லை. இதனால், பல இடங்களில் மோதல் தொடர்கிறது.
எனவே, வேட்டி, சேலை கிடைக்காதவர்கள், எந்த தேதி வரை வாங்கலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டு, அனைவருக்கும் வேட்டி, சேலை கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

