அரிட்டாபட்டியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
அரிட்டாபட்டியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
ADDED : டிச 26, 2024 05:41 AM

மதுரை: மதுரையில் மேலுார் அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் மத்திய அரசு பங்களிப்புடன் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான டெண்டர் விடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு உறுதியளித்ததோடு சட்டசபையில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசின் டெண்டர் நடைமுறை இன்னும் ரத்து செய்யப்படவில்லை.
எனவே இப்பகுதியை பல்லுயிர் பெருக்க மேம்பாடு, தொல்லியல் மற்றும்வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மதுரையில் அரிட்டாபட்டி பகுதியை சுற்றி 48 கிராமங்களை உள்ளடக்கி டங்ஸ்டன் கனிமவளம் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசே டெண்டரை இறுதி செய்துஉள்ளது. டெண்டர் இறுதி செய்யும் வரையிலும் தமிழக அரசு மறுப்பை தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒப்பந்தம் கோரி தகுதியான நிறுவனங்களை தேர்வுசெய்யும் அதிகாரம்மட்டுமே மத்திய அரசிடம்உள்ளதாகவும் அந்நிறுவனங்களோடு குத்தகை உரிமை மேற்கொள்வதும்அதிலிருந்து வரும் வருவாய் முழுமையும் மாநிலஅரசுக்கே சொந்தம் என்றும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசை காட்டி மாநில அரசும் மாநில அரசை காண்பித்து மத்திய அரசும்தப்பித்துக்கொள்ள நினைக்கும் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் சதிச்செயலை கண்டிக்கிறோம்.
அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் உள்ளடக்கி பல்லுயிர் பெருக்கமாகவும் தொல்லியல், வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தொல்லியல் துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை மூலம் இதற்கான அரசாணை வெளியிட்டு அரசிதழில் வெளியிட வேண்டும்.
மத்திய அரசு அதனை ஏற்று மறு ஆய்விற்கான அறிவிப்பை கைவிட்டு ஒட்டுமொத்த 48 கிராமங்களிலும் டங்ஸ்டன் கனிமவளம் எடுக்கும் திட்டத்தை கொள்கை ரீதியாக கைவிட வேண்டும். திட்டத்தை நிரந்தரமாக கைவிடும் வரை மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.

