சனாதனம் குறித்து தன் தாயிடம் உதயநிதி கற்று கொள்ளலாம் அர்ஜுன் சம்பத் அறிவுரை
சனாதனம் குறித்து தன் தாயிடம் உதயநிதி கற்று கொள்ளலாம் அர்ஜுன் சம்பத் அறிவுரை
ADDED : நவ 06, 2025 08:13 AM

வேலுார்: 'துணை முதல்வர் உதயநிதிக்கு சனாதனம் குறித்து சந்தேகம் இருந்தால், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்' என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் பொற்கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்ட ஊர், வேலுார் நாராயணி பீடம், மக்கள் பணிகளை செய்து வருகிறது. இங்கு, துணை முதல்வர் உதயநிதி வந்தது வரவேற்கத்தக்கது. அவர், 'ஆன்மிகவாதிகள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பரப்புகின்றனர்' என்கிறார். ஆன்மிகமும், அறிவியலும் இணைந்தது தான் ஹிந்து தர்மம்.
ஏற்கனவே, 'டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிப்பேன்' என உதயநிதி பேசினார். சனாதனம் குறித்து, அவருக்கு சந்தேகம் இருந்தால், அவர், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கற்றுக்கொள்ளலாம்.
கடவுள் மறுப்பு பேசிய அண்ணாதுரை, அவரது கடைசி காலத்தில், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் திருமந்திரத்தை கூறினார். கருணாநிதி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார்; ராமானுஜர் குறித்து நாடகம் எழுதி வெளியிட்டார். எனவே, எங்கு சென்றாலும் இங்கு தான் வந்தாக வேண்டும். தமிழ் சினிமாவில் தாலி அணிதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், விபூதி பூசுதல், திருநாமம் தரித்தல், பூக்குழி இறங்குதல் போன்ற ஹிந்து தமிழர்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

