ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக, த.மா.கா நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக, த.மா.கா நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்
ADDED : ஜூலை 18, 2024 01:26 PM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பெண் வழக்கறிஞர் மலர்கொடி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இதுவரை விசாரித்ததில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் குறித்து ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருள் மற்றும் வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரனிடம் நாள் முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அருள், மலர்க்கொடிக்கு இடையே லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் மலர்கொடியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் ஹரிஹரனும் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.