ADDED : ஜூன் 21, 2025 02:21 AM
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி.
இவர், கீழநீலிதநல்லுார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தாட்கோ திட்டத்தில், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். 2022 மே 30ல் கடனை முழுமையாக திரும்ப செலுத்தினார்.
மே 17ல் செலுத்திய, 3,000 ரூபாயை கடன் நிலுவை தொகையில் முழுமையாக கடன் கணக்கில் வரவு வைக்காமல், 640 ரூபாய் மட்டும் வரவு வைத்தார்.
தங்கப்பாண்டி திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வங்கி மீது வழக்கு தொடர்ந்தார்.
வங்கி தரப்பில், கொரோனா காரணமாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகவும், அதற்கான கட்டணமாக, 2,360 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்டு தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அளித்த தீர்ப்பு:
கடன் மறுசீரமைப்பு குறித்தோ, அதற்கான கட்டணம் பிடித்தம் செய்வது குறித்தோ வாடிக்கையாளரான தங்கப்பாண்டிக்கு வங்கி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
இது வங்கியின் சேவை குறைபாடு. அவரது மன உளைச்சலுக்கு இழப்பீடாக 20,000 ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் என மொத்தம் 25,000 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டது.
ஆணையம் விதித்த கெடு முடிவடைந்தும், வங்கி நிர்வாகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. தங்கப்பாண்டி மீண்டும் ஆணையத்தை நாடினார்.
ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கீழநீலிதநல்லுார் ஐ.ஓ.பி., கிளை மேலாளருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

